புதிதாக உருவாக்கப்பட்ட ரொக்கெட் என்ஜின் விமானத்தில் வெடித்து சிதறியதால், புதிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதன்படி வடகொரியா அனுப்பிய ரொக்கெட் நடுவானில் வெடித்து சிதறியதால், அதனது செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது.
தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து வரும் 3ம் திகதி 2வது இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக ஜப்பான் சமீபத்தில் கூறி இருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1229.png)
இந்த சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக நேற்று (27) தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடகொரியாவின் புதிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ரொக்கெட்டை, ஏவுவதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே தென் கொரிய இராணுவம் நாட்டின் வடமேற்கில் உள்ள டோங்சாங்ரி பகுதியில் இருந்து மஞ்சள் கடல் மீது தெற்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை இரவு 10:44 மணியளவில் தென்பட்டதாக தெரிவித்திருந்தது.
வடகொரியாவால் ஏவப்பட்ட பொருள் மஞ்சள் கடலில் காணாமல் போனதாக ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இந்த ஏவுதல்கள் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதாகவும்,தமது மக்களின் பாதுகாப்பு தொடர்பான தீவிரமான விடயமாகும்” என ஹயாஷி கூறியுள்ளார்.