இலங்கையில் 13 முதல் 15 வரையான வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புகைத்தல் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29 ) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேடமாகப் பாடசாலைகளில் 9 ,10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3.7 சதவீதமானோர் புகைத்தல் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
பெரும்பாலான சிறுவர்கள் இ-சிகரெட் பயன்பாட்டிற்குப் பின்னரே புகைத்தல் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகளில் ஒருவித இரசாயனம் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் இ-சிகரெட்டுகளை பயன்படுத்தும் சிறுவர்கள் வேகமாக புகைத்தல் பாவனைக்கு அடிமையாகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோர்கள் அனைவரும் அவர்களது பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிகரெட்டு பாவனை காரணமாக சுவாச மற்றும் புற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.