தேசிய சமாதான பேரவையின் சர்வ மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் பண்டாரவளை பிரதேச சர்வமத பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய சமாதான பேரவையுடன் மட்டக்களப்பு மாவட்ட வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா இனணந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேசத்தில் முன்னெடுத்துள்ள பல் சமய தலைவர்களுடான இன ஐக்கிய செயல்திட்டத்தின் ‘மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களின் பங்களிப்பு வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
அதன் ஒரு செயல்பாடாக பதுளை மாவட்டம் பண்டாரவளை பிரதேச சர்வ சமயக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயமாக சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு சர்வ சமயக் குழுக்கிடையிலான அனுபவ பரிமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் தீர்க்கப்படாத முரண்பாடுகள் போன்ற சமூக மட்ட கட்டமைப்பை உருவாக்குவதை நோக்காக கொண்டு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பவேண்டிய செயல் திட்டம் தொடர்பாகவும் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் திட்டமுகாமையாளரும், பிரதேச சர்வ மத குழு ஒருங்கிணைப்பாளர் டி, நகுலேஸ்வரன், பண்டாரவளை பெண்கள் அபிவிருத்தி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரா வெத கெதர ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இலங்கை தேசிய சமாதனப் பேரவையின் தேசிய இணைப்பாளர் எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், பண்டாரவளை பிரதேச செயலாளர், இரேஷ் ரத்நாயக்க, மண்முனை பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர்கள், பண்டாரவளை, மட்டக்களப்பு பிரதேச சர்வமத தலைவர்கள், பண்டாரவளை மட்டக்களப்பு பிரதேச சர்வமத பிரதிநிதிகள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், கலந்துகொண்டனர்.