பிரித்தானியாவில் உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-3.png)
இதன்போது, குறித்த உணவகத்தில் தந்தையான அஜீஷ் மற்றும் தாய் வினயாவுடன் உணவருந்தி கொண்டிருந்திருந்த கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 9 வயதுடைய லிஸ்ஸல் மரியா என்னும் சிறுமியே பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தினத்தன்று, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-4.png)
இந்நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட 26, 37 மற்றும் 42 வயதுள்ள மூன்று ஆண்களும், சிறுமி மரியாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் நிலைமை தற்போது மிக கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.