இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கப்பல் மூலம் நேற்று (31) மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கொழும்பிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தெற்கேயுள்ள தேவந்தர முனையில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கப்பல் புறப்பட்டது.
“Ragini Meri” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும், கப்பலை மீட்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜப்பான் கொடியுடன் பயணித்த ‘MT TONEGAWA’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 6 மீனவர்கள் நேற்று (31) மீட்கப்பட்டதாகவும், அந்த மீனவர்கள் கடற்படையினரால் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.