நடாஷா எதிரிசூரிய பௌத்த சமயத்தை அவமதித்தார் என்று கைது செய்வதற்கு முன்னர் இஸ்லாம் சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு தீ வைத்த ஞானசார தேரர் போன்றவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதில், நடாஷாவை விட ஞானசார தேரர், விஷமத்தான மான அழுத்தங்களை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்ப டுத்தியுள்ளார் எனவும் அவர் கூறினார்.
நேற்று அதிகாலை ருவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, இலங்கை பௌத்தர்கள் உண்மையான பௌத்த விழுமியங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால், தற்போது நாடு இந்தளவுக்கான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்காது என கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- பௌத்த மதத்திற்கான முழுமையான கௌரவத்தை வழங்கவேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அத்துடன் ஏனைய மதங்களையும் சமமாக மதிக்கவேண்டும்.
நாட்டில் வாழும் அனைத்துப் பிரஜைகளுக்கும் தமது நம்பிக்கை மற்றும் மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கவேண்டும்.பௌத்தர்கள் என்ற வகையில் கருணை, இரக்கம் மற்றும் அக்கறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.மேலும் கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அண்மையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு பிரிவின் மருத்துவர் சாபி தொடர்பாக நாடு முழுவதும் தவறான செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் தாமதமாகவில்லை-என்றார்.