வடக்கு நிர்வாகத்தின் அசண்டயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியரின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழிற்கு கடந்த மாதம் வருகைதந்த ஜனாதிபதி ரணிலினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் தந்தை செல்வா கலை அரங்கில் இடம்பெற்றது.
குறித்த வைபவத்தில் ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட நியமனம் மீளப் பெறப்பட்ட சம்பவம் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சமீபத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.
இவ்வாறு நேர்முகத் தேர்வு இடம்பெற்ற நிலையில் புள்ளிகள் வெளியிடப்படாமல் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வெளியிடப்பட்ட பெயர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவரும் ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டார்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் தலைமையில் யாழ் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது நியமனம் கிடைத்த பெண் ஆசிரியர் ஒருவரை நியமனத்தை தவறான நியமனம் எனக் கூறி அவரது நியமனம் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மீளப் பெறப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளும் நேர்முகத் தேர்வு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்ற நிலையில் நியமன கடிதங்கள் வழங்குவதற்கு முன்னரே அவர்கள் பெற்ற புள்ளிகளை மாகாணப் பொதுச் சேவை ஆணை குழுவினால் வெளியிடப்பட்ட நிலையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.