“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், ஜே.வி.பியினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்கவே கூடாது” என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்த ஜே.வி.பியினர் தமிழர்களுக்கு எப்படி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்குவார்கள்? எப்படி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்?” என்றும் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜே.வி.பியினர் ஒருபோதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டார்கள் என்றும், அவர்கள் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்க முன்வரமாட்டார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும் என்றும், இதுவே தங்களின் நிலைப்பாடு என்றும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணத்தில் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆயுத வன்முறையாளர்களான ஜே.வி.பியினரை நம்பி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே தமிழர்களுக்குத் தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவர். எனவே, அவருக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.