ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இராணுவத்தை பலப்படுத்தவும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகின்றது.
இராணுவத் திட்டத்தின் பரந்த அளவுருக்கள், ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த வரைவு சட்டத்தை உருவாக்க சட்ட வரைவாளர், அழைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கான கூடுதல் செயற்பாடுகளாக பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதில் உதவுதல். அமைச்சரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான செயலாளருடன் இணைந்து, ஆயுதப் படைகளின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பாதுகாப்பு உத்திகளை வகுக்க வேண்டும் என்பனவும் அடங்குகின்றன.
ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் ஆயுதப்படைகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை வகுத்தல் என்பனவும் இந்த கூடுதல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளன.
பாதுகாப்பு படைகளின் பிரதானி என்பது ஆயுதப்படைகளில் மிக முக்கியமான மற்றும் மிக உயர்ந்த நியமனமாகும். ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி, இந்த பதவிக்காக, இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை ஆகியவற்றில் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
அவர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் பணியாற்ற தகுதியுடையவர்கள். பெரும்பாலும் இராணுவத்தைச் சேர்ந்த பதினொரு தளபதிகள் இந்தப் பதவியை இதுவரை வகித்துள்ளனர்.
ஜெனரல் ரொஹான் தலுவத்த, ஜெனரல் லயனல் பலகல்ல, அட்மிரல் தயா சந்தகிரி, எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, ஜெனரல் சரத் பொன்சேகா, எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, ஜெனரல் கிருஷாந்த ரவி சில்வா, அட்மிரல் ரவி சில்வா. விஜேகுணரத்ன ஆகியோர் இந்த பதவியை வகித்துள்ளனர் .
2020இல் இருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.