சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் வரையில் மாகாண சபை முறைமை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தமது அரசாங்கத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய பிரச்சனைக்கு தீர்வாக மாகாண சபை முறைமையை தமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை என்பது தமக்கு கிடைத்த உரிமை என தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நம்புவதாகவும், இந்த முறைமையை இல்லாதொழிப்பது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறுகிறார்.
பிரித்தானியாவின் லண்டனில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிகத் தீர்வாகவே மாகாண சபை முறைமையை முன்னெடுத்துச் செல்கிறோம்.
ஆனால் அது நிரந்தரத் தீர்வு அல்ல என்றும் நம்பப்படுகிறது. நிரந்தர தீர்வை அடையாளப்படுத்தும் இடைக்கால முறையில் மாகாண சபை முறைமையை பேணுவதே எமது கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.