ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்பு தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது பெங்களூருவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் ஏர் இந்தியாவின் AI 175 என்ற விமானத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானத்தில் பயணித்த மாதுரஸ் பால் என்ற பயணிக்கு பயணத்தின் இடையே ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.
இது குறித்து மாதுரஸ் பால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஏர் இந்தியா விமான பயணத்தின் போது வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை கண்டறிந்தேன்.
உணவு மென்று சாப்பிடுவதற்கு முன்னதாக அதை கண்டறிந்தேன். அதனால் எந்த வித அசம்பாவிதமும் நிகழவில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து உள்ள ஏர் இந்தியா நிறுவனம், உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், உணவு பரிமாற்றம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கு உணவு பரிமாற்றம் செய்யும் கேட்டரிங் நிறுவனத்திற்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.