யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சுவேலி-பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் த.பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதன்போது, வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் (18) மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சிஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே காவல்துறையினர் இவ்வாறு கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், சந்தேகநபர்களைநேற்றைய தினம் (19) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேகநபர்கள் மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் வீட்டில் வைத்து தீ மூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்ததையடுத்து, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.