மட்டக்களப்பில்விவசாயத்தை கைவிட்டு கூலி தொழில் செய்யவும் வெளிநாடு செல்லவும் நிர்பந்திக்கப்படுவதாக நிலக்கடலை செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – கித்துள் பிரதேசத்தில் கச்சான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலைக்கு நிர்ணய விலை இன்றி பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கித்துள் பிரதேசத்தில் கச்சான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் மாத்திரம் ஒரு போகத்திற்கு ஐந்து இலட்சம் கிலோ நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதனை சந்தைப்படுத்துவதில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவித்துள்ளதாவது , “கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வருகை தந்த நிறுவனங்கள் ஒரு கிலோ நிலக்கடலையை 800 ரூபா கொடுத்து கொள்வனவு செய்து வந்த நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நிலக்கடலை இறக்குமதி செய்வதால் உள்ளூர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது நிறுவனங்கள் எதுவும் வருவதில்லை.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை காரணமாக டொலர் இன்றி நாடு தவித்த போது இறக்குமதி நிறுத்தப்பட நிலையில் உள்ளூர் உற்பத்திகளை நம்பியே நாடும், நாட்டிற்குள் இருந்த நிறுவனங்களும் இருந்தன.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை, கௌப்பி, பயறு, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து உள்ளூர் உற்பத்தியில் ஈடுபடும் மேட்டு நில பயிர்ச்செய்கையாளர்களின் உற்பத்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.
ஆனால், தற்போது மீண்டும் நிலக்கடலை, கௌப்பி உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்தியாளர்களும் அவர்களிடம் தொழில் பெரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இறால் பண்ணை அமைப்பதில் தீவிரம் காட்டும் கிழக்கு மாகாண ஆளுநர், மற்றும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக வானிபத்துறை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மாத்திரமே எமக்காக நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
நாங்கள் வங்கிக் கடன்களை பெற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதால் எமது உற்பத்திகளுக்கு உரிய விலை இன்றி தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வருகின்றோம்.
இதற்குரிய தீர்வை அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என்றால் நாங்கள் இந்த தொழிலை கைவிட்டு கூலி தொழில் அல்லது வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும், நாங்கள் எமது விவசாயத்தை கைவிட்டால் பல குடும்பங்கள் தொழில் இன்றி வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
எனவே, இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்” என கவலை வெளியிட்டுள்ளார்கள்.