இன்று (27) பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் என்று கல்விஅமைச்சு நேற்று (26)அறிவித்திருந்த போதிலும் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்ஸப் குழுமங்களின் மூலம் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு செல்லவேண்டாம் எனவும், முற்றுமுழுதாக கல்வி நடவடிக்கைகளை புறக்கணிக்க கோரியும் குறித்த சங்கங்களின் முக்கிய தரப்பினர் குரல்வழிச் செய்திகள் மூலம் பாடசாலைக்கு செல்லவிருந்த ஆசிரியர், அதிபர்களை ”வருவதை பிறகு பார்த்து கொள்ளலாம்” எனவும் தெரிவித்ததாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் இன்றைய தினம் கல்குடா கல்வி வளையத்தில் நடைபெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியானது நிறுத்தப்பட்டு, பிற்போடப்பட்டுள்ளதுடன், செங்கலடி மத்தியக்கல்லூரியில் நடைபெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியை நடாத்த வேண்டாம் என சில தரப்பினர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் மட்டக்களப்பு நகர், கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களினால் பாடங்கள் நடைபெறவில்லை என்றாலும், பாடசாலைகளில் ஆசிரியர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பாடசாலைகளுக்கு சமூகமளித்த மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சிறிது சிறிதாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உயர்ந்து வருகின்ற சூழலில் ஆசிரியர், அதிபர்களின் இந்த போராட்டம் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்படுவதாகவும், இவ்வாறான சூழ் நிலையில் ஒரு மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டால் கூட அதற்கு சுயநலமாக சிந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் இந்த செயற்பாடே காரணமெனவும் பெற்றோர் ஒருவர் எமது battinaatham ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.