நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளிளலான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
நேற்று (01) காலை மட்டக்களப்பு கூழாவடியில் உள்ள விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என்னுந்தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த நல்லிணக்க பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கையின் பல பாகங்களிலிருந்து இளைஞர் யுவதிகள் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் சமன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாமிய மத குருமார்கள் என மத அனுஸ்டானங்களை தொடர்ந்து யாத்திரிகர்களுக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூஜை வழிபாடுகளில் பாதை யாத்திரை செல்லும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதை தொடர்ந்து யாத்திரையானது உகந்தை மலையினை நோக்கி ஆரம்பமானது.