கம்பளையில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயதுக் குழந்தை தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புரஸ்ஸ டெல்டா தோட்டத்தின் வடக்கு பகுதியிலே தாய் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஸ்வர்ணா என்ற இந்த தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வானொலியை சத்தமாக ஒலிக்க செய்துவிட்டு துணியால் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
நீண்ட நேரமாக சிறு குழந்தை அழும் சத்தத்தை கேட்ட நபர், இது குறித்து விசாரித்த போது, மேற்கூரையில் பெண் தூக்கில் தொங்குவதையும், குழந்தை கால்களை பிடித்துக்கொண்டு அழுவதையும் கண்டு அயலவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் உடனடியாக துணியை அறுத்து தாயை தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதற்கமைய, புரஸ்ஸ பொலிஸார் சோதனையிட்ட போது, தாய் குழந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதமும் கிடைத்தது. “தங்கம் நீ கவனமாக இரு… நான் செல்கிறேன்… இப்படிக்கு மம்மா” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த பெண்ணின் கணவர் தோட்டத்தில் பணிபுரிபவர் எனவும் மரணத்திற்கான காரணம் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலத்தா சம்பவ இடத்திற்குச் சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.