ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று (05) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில் அவர் இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்திருந்தார்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (05) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.
இதேவேளை கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அலுவலகப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் ஸ்ரீலங்கா அதிபர் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.