காவல்துறை மா அதிபரினால் வழங்கப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கடிதமானது, காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் , ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குறித்த போலிக் கடிதம் மற்றும் அந்தக் கடிதத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கடிதம் ஏற்கனவே இலங்கையில் உள்ள பல முன்னணி காவல்நிலையங்களுக்கும் அதன் பிரதான அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் சிறப்பு என்னவென்றால், இதை அச்சிடுவதற்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் அதையும் அச்சிட முடியாது.
இது பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், அதில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஊடுருவி, பாதிக்கப்பட்ட கணினிகளில் இருந்து தரவைத் திருடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கணினியின் வேகம் குறைவடைவதுடன் அதில் உள்ள தரவுகளை திருடும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோல், 2016 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் மத்திய வங்கியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ஹக்கர்ஸ் கொள்ளையடித்துள்ளனர்.
அதன் காரணமாகவே இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்த இணைய கடிதம் தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.