90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை காலமும் இறைப்பு முறை மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்தலாம் எனவும், தேவையான பசளையை கரைசலாக நீருடன் சேர்த்து நீர் பாய்ச்சுவதனாலும், புற்கள் வளர்வதை தடுப்பதனாலும் செலவும் மீதப்படுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அரசகேசரி தெரிவிக்கிறார்.
குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெற முடியும் எனவும், மிக முக்கியமாக நீர் விரயமாவதையும், நீர் பாய்ச்சலுக்காக செலவிடும் நேரத்தையும் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தினரும் இன்று (11) சென்று பார்வையிட்டுள்ளனர்.