இலங்கையின் இருபதுக்கு20 அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வனிந்து ஹசரங்க தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிலையில், சரித் அசலங்க புதிய தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 27ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு20 தொடரிலிருந்து அசலங்க அணித்தலைவராக செயற்படவுள்ளார்.
இலங்கை அணித் தேர்வாளர்கள் இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை அசலங்கவுடன் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளனர்.

27 வயதுடைய சரித் அசலங்க, இதுவரை 47 இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடி, 5 அரை சதங்களுடனும் 126.76 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1,061 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அதேவேளை, ஒரு நாள் அணிக்கான தலைமைத்துவமும் அசலங்கவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகின்றது.
தற்போது ஒரு நாள் அணிக்கான தலைவராக செயற்படும் குஷல் மெண்டிஸ் 16 போட்டிகளில் அணியை வழிநடத்தி 8 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளார்.

இது ஒரு சாதகமான தரவாக உள்ள போதிலும், அவரின் தலைமைத்துவ சுமையை குறைத்து சீரான துடுப்பாட்டத்தை வெளிக்கொண்டு வரவைக்கும் முயற்சியாக இது உள்ளதாக பார்க்கப்படுகிறது.