முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப் பணிகள் ன் நேற்று ஜூலை 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியும் பகுதியளவில் மூடப்பட்டது.
அதேவேளை அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழியை காணாமல்போனோர் பணியக அதிகாரிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகியதரப்புக்களின் முன்னிலையில் பிறிதொரு நாளில் முழுமையாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினர்களதும் அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இதேதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கடந்த 2023ஆம்ஆண்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை அகழ்ந்தபோது மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பூர்வாங்க அகழ்வாய்ப்புப்பணிகளில் குறித்த பகுதி மனிதப்புதைகுழி என இனங்காணப்பட்டநிலையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மூன்றுகட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது மொத்தம் 52மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள், ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவி, ஆடைகள், உள்ளாடைகள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகள் மற்றும், சையனைட் குப்பி உள்ளிட்ட தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினராலும், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, தடையவியல் பொலிசாராலும் இந்த அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த அகழ்வாய்வுப் பணிகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பான சட்டத்தரணிகள், காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கிணித்துவந்ததுடன், ஐ.நாவின் இலங்கை அலுவலகத்தின் மனிதஉரிமை அலுவலர், அமெரிக்கத் தூதுவரக அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேசத் தரப்புக்களும் அவ்வப்போது இந்த அகழ்வுப்பணிகளை கண்காணிந்துவந்தன.
அதேவேளை ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் ஒருமுறை இந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
அத்தோடு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆ்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் தமது கண்காணிப்புக்களைச் செலுத்திவந்தன.
இந் நிலையில் கடந்த ஜூலை.15 திங்கட்கிழமையுடன் இந்த கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வுகள் நிறைவிற்கு வந்ததுடன், அதனைத்தொடர்ந்து ஜூலை.16 நேற்று அகழ்வாய்வின்போது தோண்டப்பட்ட குழி அளவீடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பகுதியளவில் மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிறிதொருநாளில் காணாமல்போனோர் அலுவலகப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முன்னிலையில் குறித்த புதைகுழி முழுமையாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிதொடர்பான வழக்கு, குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஜூலை. 16 நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினரதும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இந்த அகழ்வாய்வு தொடர்பாக தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையும் கோரப்பட்டுட்டது. அந்த சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையிலே இறப்பிற்கான காரணம், பால், வயது, உயரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை தாக்கல்செய்யப்படவேண்டுமென நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்ந அகழ்வாய்வில் பங்குபற்றிய காணாமல் போனோர் ஆலுவலக்அதிகாரிகளின் அறிக்கை, கொக்குத்தொடுவாய் கிராமசேவையாளரின் அறிக்கை, கொக்கிளாய் பொலிசாரின் அறிக்கை, தடையவில் பொலிசாரின் வரைபடங்கள், புகைப்படங்கள், ஏனைய விடயங்கள் அடங்கிய அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பங்குபற்றிய அனைத்துத் தரப்புக்களதும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பிற்பாடே ஒட்டுமொத்த அறிக்கைகளையும் வைத்தே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேவேளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த புதைகுழி மூடப்படவேண்டுமெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.