துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பெண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 13-ஆம் திகதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில், கடந்த 15-ஆம் திகதி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது தனது வலது காதில் வெள்ளை நிற பேண்டேஜை அவர் அணிந்து வந்திருந்தார். “துப்பாக்கிச் சூட்டில் நான் இறந்திருக்க வேண்டியவன். ஆனால், இங்கு வந்துள்ளேன்” என ட்ரம்ப் தெரிவித்தார். இதில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுக்கு வந்திருந்த குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்பின் அபிமானிகள் தங்களது வலது காதில் பேண்டேஜ் அணிந்து ஆதரவு தெரிவித்தனர். இதனை மக்கள் தங்களது அரசியல் குறியீடாக பார்ப்பதாகவும் தகவல். இது அமெரிக்க நாட்டில் பேஷன் சார்ந்த ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் சதி இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிறகு ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்து இருப்பதாகவும் தகவல்.