ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த பருவத்தில் இடைநிறுத்தப்பட்ட இந்த திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய உயர்மட்டக் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இசுமி ஹிரோடோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவில் இணைந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.
கடந்த அரசாங்கத்தினால் இடைநடுவில் நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இது ஒரு நல்ல அடிப்படையாகும்.
ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு தொழில்நுட்ப துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த தயாராக இருப்பதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.