வங்காளதேசத்தில் இருந்து இந்திய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்காளதேச நாட்டில் கலவரம் வெடித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலவரத்தை அடக்க இராணுவத்தினர் களமிறக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குழுக்கள் அல்லது நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு சிக்கிய தமிழர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ”வங்காளதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நேற்று இரவு 7.30 மணியளவில் வங்காளதேசத்தில் இருந்து இரு விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வங்காளதேசத்தில் இருந்து அடுத்தகட்டமாக 60 பேரை அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 1,000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.