மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (24) காலை இராணுவத்தினர், பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கென மோப்ப நாய்களின் உதவியும் பெறப்பட்டிருந்தது.
கடந்த 15 ஆம் திகதி குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் கடந்த 22 ஆம் திகதி குறித்த வீட்டின் முன்பாக இருந்து கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்படி சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை ஆரம்பித்த இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது பொலிஸாரும் இராணுவத்தினரும் விஷேட அதிரடிப்படையினரும் வீடு வீடாக சென்று மோப்ப நாய்கள் சகிதம் தேடுதல் நடத்தினர்.
சுமார் 35 வீடுகள் இவ்வாறு சுற்றி வளைப்பு தேர்தல் நடவடிக்கை உட்படுத்தப்பட்டதாகவும் இதில் 28 பொலிஸார், 10 விசேட அதிரடிப் படையினர், 22 இராணுவத்தினர் என சுமார் 60 படையினரும் , பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.