கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷ முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் திகதி , தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து மட்டக்களப்புப் பகுதியில் தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் தந்து மனுவில் தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மனுதாரர், குற்றப் புலனாய்வுத் துறையில் தூங்குவதற்குக் கூட தனக்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தரணிகளை சந்திக்க போதுமான வாய்ப்பு தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தனது அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டுகிறார்.
எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறை தன்னைக் கைது செய்து தடுத்து வைத்தது தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரினார்.
மேலும், தனது சட்டத்தரணிகளை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் பிள்ளையான் தனது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.