கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பன இணைந்து நடத்திய ஓரங்கட்டப்படு மருவி வரும் கலைகளையும் கலைஞர்களையும் உயிர்ப்பூட்டுவதற்கான கலாசார சங்கம நிகழ்வு கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் செவ்வாய்கிழமை(24.07.2024) நடைபெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் பல்கலைக்கழக கலைத்துறை விரிவுரையாளர்கள், கலைத்துறை மாணவர்கள், அகல் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கனகசிங்கம், பாரம்பரியக் கலைகள் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பாரம்பரியக் கலைகளைக் கற்பதில் நமது மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் பாரம்பரியக் கலைகளைக் கற்று அதன்மூலம் தொழில் வாய்ப்பைப்பெறுவது என்பது சிக்கலாக இருக்கிறது. அதனோடு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில்தான் பாரம்பரியக் கலைகள் காணப்படுகின்றன.
ஆனால், வெளிநாடுகளில் நிலைமை வேறு. அங்கு இத்தகைய பாரம்பரியக் கலைகளுக்கூடான ஆற்றுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், காரணம் உளவியல் ரீதியாக உள் சமாததானத்தையும் நிம்மதியையும் வழங்குகின்ற ஒரு அம்சமாக அவர்கள் பாரம்பரியக் கலைகளைப் பார்க்கிறார்கள்” என்றார்.
நிகழ்வில் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் தமிழ் வாழ்த்து, நடனம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து, கிழக்கின் அகல் இளையோர் குழுவினரின் அனுபவப் பகிர்வு, ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைகளின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் கலந்துரையாடல், இளையோருக்கான சான்றிதழ்கள் வழங்கல், நாட்டார் பாடல்கள் சமர்ப்பணம், பறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரியக்கலைப் படைப்பு ஆகியவற்றோடு பாரம்பரிய உணவுகளை ருசித்துப் பார்க்கும் அறுசுவை நிகழ்வும் இடம்பெற்றது.