இந்தியாவின் அதானி நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மன்னார், பூநகரியில் அமைக்கவுள்ள காற்றாலை மின் சக்தி திட்டப் பணிகள் 2024 டிசெம்பருக்கு முன்னர் நிறைவேறும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் திட்டத்துக்கு மன்னாரிலும் பூநகரியிலும் மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் தொடர்பாக நேற்று பூநகரியில் நடந்த காற்றாலை மின்சார திட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கூட்டம் முடிவு ஏதுமின்றி நிறைவடைந்ததாக அறிய வருகின்றது. அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, பூநகரியில் காற்றாலை மின் திட்டப் பணிகளை தொடங்க கடந்த ஓகஸ்ட் மாதமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது. மன்னாரில் 286 மெகாவாட் , பூநகரியில் 234 மெகாவாட் என 500 மெகாவாட் மின்சாரம் இந்தத் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களுக்காகவும் அதானி நிறுவனம் 50 கோடி டொலர்களை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காற்றாலை மின் திட்டத்துக்கு மன்னார், பூநகரியில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.