யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர்.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 44209 பொலிஸ் இலக்கமுடைய பொலிஸ் சார்ஜன்ட் தம்பிராஜா தர்மரட்னம் என்போருடன் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த, டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கல் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.