2023 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 230,000 பேர் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது இது தெரியவந்துள்ளது.
அதன் போது, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய 2023 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் 23% மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 77% கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் நேபாளத்திற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பணம் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.