கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் முற்றத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவத்தன்று, மார்ச் 13ம் திகதி கொலைகாரன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும் தீபாவின் தாயார் லீலாவதி சீவரத்தினம் கதவை திறந்துள்ளார். அவரும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காக, சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் தீபாவின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் தான் இந்த கொலைக்கு திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் என நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.
விசாரணையில், தமது மனைவியை கொல்லும் பொருட்டு Steadley Kerr என்ற வாடகை கொலையாளியை விஜேந்திரன் பாலசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
வெள்ளிக்கிழமை அந்த நபர் மீதும் முதல் நிலை கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, Steadley Kerr என்பவரின் நண்பர் Gary Samuel என்பரும் குற்றவாளி என நடுவர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
Gary Samuel என்பவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் வெறும் வாகன சாரதி மட்டுமே என்றும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
ஆனால் இந்த இருவருமே கொலைக்கு திட்டமிட்டதும், வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதும் என அரசு தரப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர். இவர்கள் மூவருக்குமான தண்டனை மிக விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.