வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமேகத்தின் அவசர தலையீட்டைக்கோரி தமிழ் தேசிய பேரவையினருக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் கொழும்பில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் குறித்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.
சந்திப்புகள் தொடர்பாக தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில்,
முதலாவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக்கையும் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் கலாநிதி பாண்டேயுடன் சந்திப்பு இடம்பெற்றது மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி மகான்ரே பிறஞ்சேயுடன் இடம்பெற்றது.

தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் அவரது இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் வவுனியா தவிரந்த நான்கு மாவடங்களில் சுமார் 6000 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம்.
மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரித்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டினை அரசு மீள பெறவேண்டும் என வலியுறுத்தினோம்.
வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும் போர் அழிவுகள் காரணமாகவும் பெருமளவு மக்களின் சொந்தமான காணி ஆவணங்கள் சொத்துக்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது.
அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்களை உறதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம்.
போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது. இந்தியாவில் 1 இலடச்த்திற்கும் மேற்பட்ட எமது ஈழ தமிழர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகாரமின்றி வாழுகின்றனர்.
அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்படபோவதுமில்லை. இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும். எனவே இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்திய தூதுவரையும் சந்தித்தோம்.
இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலமே நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதல்ல. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கவேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை. இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற திட்டத்தினை முற்று முழுதாக ஏற்றுகொள்ள முடியாது.
எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படல் வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.