இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா கலப்பு, உப்பு மற்றும் சாயங்களை பயன்படுத்துவதையும், வெள்ளை சீனியை சிவப்பு சீனியாக மாற்ற அளவிற்கு அதிகமான சாயங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் 40 சதவீதமும், சிவப்பு சீனியில் 40-50 சதவீதமும் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் கலந்திருப்பதாகவும் அவை புற்று நோயை உண்டாக்கும் ஆபத்துக்களை கொண்டுள்ளதென தெரியவந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சிற்றுண்டிகளுடன் சாப்பிட வழங்கப்படும் தக்காளி சோஸ்களில் பெரும்பாலும் தக்காளி இல்லை என்றும் அதிகப்படியான உப்பு, மா மற்றும் நிற கலவைகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிளகாய் தூள், சிவப்பு சர்க்கரை மற்றும் தக்காளி சோஸ் போன்றவைகளில் போலி சுவைகள் மற்றும் வண்ணங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவை பிரகாசமான நிறத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மிளகாய்த் தூள், சிவப்பு சீனி, தக்காளி சோஸ் போன்றவற்றில் போலியான சுவையூட்டிகள் மற்றும் வண்ணம் சேர்த்து விற்பனை செய்த பெருமளவிலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வர்த்தகர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ரொஷான் குமார மேலும் தெரிவித்துள்ளார்.