அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், மெட்டா நிறுவன சி.இ.ஓ மார்க் ஸூக்கர் பெர்க், கொரோனா பதிவுகளை நீக்கும் படி பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், அந்நாட்டு பாராளுமன்ற நீதித்துறை கமிட்டி தலைவரும், குடியரசு கட்சி எம்பியுமான ஜிம் ஜோர்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘கொரோனா பரவிய காலத்தில் நோய் தொற்று தொடர்பாக சில பதிவுகளை நீக்குமாறு வெள்ளை மாளிகையை சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்தனர். நகைச்சுவையான நையாண்டி செய்யும் கொரோனா பதிவுகளை நீக்குமாறு பல மாதங்கள் இந்த அழுத்தம் தரப்பட்டது. முதலில் இதை பேஸ்புக் ஒப்புக் கொள்ளாததால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
அரசின் இந்த அழுத்தம் தவறானது. ஆனால் இதைப் பற்றி நான் வெளிப்படையாக பேசாசததற்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், அப்போது எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்” என கூறி உள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை, ‘‘கொடிய நோய் தொற்றை எதிர்கொள்ளும் போது, பொது சுகாதாரம், பாதுகாப்பை உறுதிபடுத்த பொறுப்பான நடவடிக்கைகளை அரசு ஊக்கவித்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கும் விடயங்களின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். என்னமாதிரியான தகவல்களை தரலாம் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம்” என கூறி உள்ளது