எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை, மக்களின் வருமான வழிகளை அதிகரிப்பது மற்றும் ரூபாயை வலுப்படுத்துவதன் மூலம் நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மற்ற வேட்பாளர்கள் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகவும், மானியங்கள் வழங்குவதாகவும் உறுதியளிக்கிறார்கள். ஆனால் தாம் அத்தகைய வாக்குறுதிகளை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய மானியங்கள் மக்களின் வருமான ஆதாரங்களை அதிகரிப்பதையும் உற்பத்தியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த அணுகுமுறை வருமானத்தை அதிகரிப்பது மட்டுமன்றி அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.