எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாது எனவும், அவரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு ஆதரவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் வாக்களிப்புக்கள் ஆரம்பித்துள்ளன. நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு தேர்தலை நடத்தும் வாய்ப்பு இருக்கவில்லை. சிலர் பாராளுமன்றத்தை முடக்க வந்தனர். அதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினோம்.
இன்றைய நிலையில் சஜித் பிரேமதாசவால் அனுர குமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. நான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும், மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் மற்றுமொரு எதிர்கட்சிக்கு நாங்கள் இடமளிக்கவில்லை.
அந்த வகையில் சஜித் பிரேமதாச இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க இருக்கிறார். நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் கூட அனுர அந்த அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டார்.
ஆனால் இன்று அநுர சஜித்தை மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு சாதமாக அமைந்துள்ளன. எனவே ஐக்கிய தேசிய கட்சியை முன்னோக்கி கொண்டு வந்த தலைவர்களின் பணியை இன்று நானே ஆற்றுகிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- என்றார்.