வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்த திகதியன்றே வெளியிடப்படும் என மேலும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
இந்த ஆண்டு, அதிகபட்சமாக, பதினைந்து இலட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் மற்றும் மாணவர்கள் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயம் என்றும், தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கேற்ப இரண்டாவது உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் பெற்ற 292 மாணவர்கள் கடன் தொகையை செலுத்த தவறியமையால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் எட்டாவது தடவையாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இம்முறை 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.