டைட்டானிக் மூழ்கிய கடல் பகுதியில் ஏதோ இருக்கிறது என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 1912 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1200 பேர் பலியாகிவிட்டனர். இந்த கப்பலின் பாகங்கள் ஆங்காங்கே உடைந்து சிதறி உள்ளது.
இந்த கப்பலின் பாகங்கள் தற்போது அந்த கடல்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் உள்ளது. இந்த கப்பலை ஆய்வு செய்யும் பணியில் தி ஓசன் கேட் எனும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக டைட்டன் எனும் நீர் மூழ்கி கப்பலை தயாரித்தது. இதில் பைலட் உள்பட 5 பேர் வரை பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டது.
ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தையும் இந்த நிறுவனம் முன்னெடுத்தது. இதன் மூலம் டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்று டைட்டானிக்கை பார்வையிட 2.5 லட்சம் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 2.04 கோடியாகும். இதுவரை 2 ஆண்டுகளில் தலா ரூ 2 கோடி செலுத்தி 46 பயணிகள் வரை இந்த நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்டனர். இது போல்தான் இந்த நீர் மூழ்கி கப்பல் பயணம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அப்போது அதில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜாடா மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றி, ஓசன்கேட் சாகச சுற்றுலா நிறுவனத்தின் சிஇஓ.,வும், நீர்மூழ்கியின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணம் செய்தனர்.
இவர்கள் பயணம் செய்த அந்த நீர் மூழ்கி கப்பல் திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த கப்பல் வெடித்து சிதறியதாக கடலோர காவல் படை தெரிவித்தது. இதையடுத்து 5 நாட்கள் தேடிய நிலையில் 96 மணி நேரம் மட்டுமே ஆக்ஸிஜன் இருக்கும் என்பதால் அந்த 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அவர்களது உடல்கள் மீட்கப்படுவது சிரமம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் டைட்டானிக் படம் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்திருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்திருக்கிறேன். அங்கு எனக்கு சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டதட்ட 3,500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். அங்கு ஒவ்வொரு கனமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸே இல்லாமல் ஆகிவிடும். டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான சக்தி இருக்கிறது.
வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்கள் உள்ளன. அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அனைவரும் இறந்துவிட்டனர் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.