எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தியடையும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (09) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது.
காலி, அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற அபிவிருத்தியை மட்டக்களப்பிற்கு கொண்டுவரவேண்டும் அதற்காகத்தான் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் வீதிகளை அபிவிருத்தி செய்தோம் வீடுகளை அமைத்து கொடுத்தோம் சுற்றுலாவை அபிவிருத்தி செய்தோம் அதன் மூலமாக இந்த பிரதேசங்களில் தொழில்வாய்ப்பு எற்படுத்தப்பட்டது.
அதேவேளை மத்தளை விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வரையும் அதிவேக நெடுஞ்சாலை பாதை அமைக்க எங்களுடைய திட்டம் ஒன்று இருந்தது அது ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டனர் எனவே நாங்கள் ஆட்சிக்குவந்தால் மத்தளையில் இருந்து மட்டக்களப்பிற்கு அதிவேக பாதை அமைப்போம் என உறுதியாக கூறுகின்றோம் அதன் மூலம் அம்பாந்தோட்டையுடன் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களுக்கிடையிலான உறவு ஏற்படுவதுடன் சுற்றுலாதுறை மேலும் அபிவிருத்தியடையும்.
இந்த பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொழும்பிற்கு இலகுவாக கொண்டு செல்லமுடியும் எனவே எங்களுக்கு தேவை இந்த நாட்டை அபிவிருத்திக்கு கொண்டு செல்லவதற்கு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வளமான எதிர்காலம் ஒன்றை உருவாக்கவேண்டும்.
தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன்.
இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன்.
சிந்தனையுடைய இளைஞர்களை உங்களது எதிர்காலத்தை திட்டமிட என்னோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.