வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அரச நிலங்கள் அனைத்தையும் சீனி தொழிற்சாலை ஒன்றை அமைக்க பயன்படுத்த உள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா- நயினாமடுவில் சீனித்தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான முன்மொழிவானது அமைச்சரவைக் கூட்டத்தில் திடீரென நேற்றைய தினம் (26.07.2023) முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
இதேவேளை முதலீட்டுச் சபை மூலமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவிப்பின்படி நயினாமடுவில், சீனி தொழிற்சாலை அமைப்பதற்கு மட்டும் 492 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது. தொழிற்சாலைக்கு வேண்டிய கரும்பு உற்பத்திக்காக மேலதிகமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் மேலும் 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேலதிக கரும்புச் செய்கைக்காக தனியாருக்கு வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் உள்ள அரச நிலங்கள் அனைத்தும் இந்த திட்டத்துக்காக வழங்கப்படுவதோடு அதன் அருகில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தும் இந்த திட்டத்திற்காக அரச காணிகளை கையளிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் ஜனாதிபதி கேட்டதாகவும், அது தொடர்பில் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்ததாகவும், அப்படி கருத்தூன்றி படிப்பதற்கு அதற்குள் ஒன்றுமில்லை என்றபடி ஜனாதிபதி அந்த விடயத்தை கடந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.