தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று (12) மாலை மட்டக்களப்பு நகருக்குள் தேசிய வெசாக் வார நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரன்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா மற்றும் பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,சிவஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வெசாக் அலங்கார தோரணம் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மங்கலராம விகாரை வளாகத்தில் மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையங்களினால் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் கலந்துகொண்ட பொதுமக்களுக்கான தன்சல் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
வெசாக் நிகழ்வுகளை காண மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் குழுமியதன் காரணமாக அப்பகுதியில் சனநெருக்கடி ஏற்பட்டதுடன், அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்ததை காணமுடிந்து.
















