தமிழ் தேசிய போராட்டம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுடன் இந்தியா விரும்புகின்ற ஒருவரை நாட்டுக்கு தலைவராக கொண்டுவரவேண்டும் என்ற அடிப்படையில் பொதுவேட்பாளர் இறக்கப்பட்டுள்ளார். கிழக்கு மண் விடுதலை போராட்டத்துக்கு ஆயிரக்கணக்காண மாவீரர்களை இழந்த வலிசுமந்த மண் இது ஒரு வரலாற்று தவறு இனத்துக்கு செய்கின்ற பச்சை துரோகம் எனவே இந்த பழியை சுமக்காமல் அரியேந்திரன் விலகவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் படுவான்கரை மண்ணில் இருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் தமிழ் தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரிய துண்டுப்பிரசுரம் விநியோகிப்பு பிரச்சார நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (14) தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக 8 ஜனாதிபதிகளை சந்தித்துள்ளோம் ஆனால் அனைவரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எங்களுடைய மக்களின் வாக்குகளை பெற்று , தமிழ்மக்களின் கலாச்சார விழுமியங்களையும் இருப்புக்களை கேளிவிக் குறியாக்கிய விதமாகவே செயற்பட்டுவந்தனர்.அதனடிப்படையில் வடக்கு கிழக்கு மக்கள், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் என நா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இருந்து இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம்.
இந்த நாட்டினுடைய அடிப்படை பிரச்சனை ஒற்றையாட்சி கட்டமைப்பு. இது பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் முன்னிறுத்தி ஏனைய இனங்களை அடக்கி ஒடுக்கும் விதமாகத்தான் இந்த அரசியல் அமைப்பு இருக்கின்றது எனவே இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை சமஸ்டி கட்டமைப்பாக மாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக போராடிவருகின்றனர். எனவே இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றப்படும் வரை தமிழர்கள் இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என பிரச்சாரத்தினை மேற்கொண்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி பொறுப்பாளர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் புலனாய்வாளர்கள், பொலிசார் கெடுபிடிகளை செய்து வருகின்றனர்.
அரசு தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாக அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு, அத்தோடு இந்தியா போன்ற நாடுகள் தங்களுடைய நலனை மட்டும்தான் கொண்டு செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் ஒரு அதிபர் வரவேண்டும் என காய் நகர்தல்களும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா தனக்கு சாதகமான ஒருவரை கொண்டு வருவதற்காக தமிழர்களின் பலத்தை உடைப்பதற்காக பொதுவேட்பாளர் ஒருவரை கொண்டுவந்து, தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே தமிழர்கள் இந்த தீவில் வாழவேண்டுமாக இருந்தால் இந்த விடையங்களை கட்சிதமாக கையாளவேண்டும்.
காலாகாலமாக இடம்பெற்றுவரும் இன அழிப்புக்கு பரிகாரம் ஜ.நா. மனித உரிமையில் கோரப்பட்டு, பொறுப்பு கூறலை அங்கே முடக்கிவிடப்பட்டுள்ளது. அதனை சர்வதேச நீதிமன்றிக்கு கொண்டு வரவேண்டும் என தமிழர்கள் ஆணைவழங்கிய தமிழ் தரப்புக்கள் அதற்கு மாறாக செயற்படுகின்றனர். எனவே ஒரு உறுதியான தரப்புக்கு அந்த ஆணை வழங்கவேண்டும். இப்போது இருக்கின்றவர்கள் தங்கள் நலன்களுக்காக செயற்படுகின்றனர்.
இன்று மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி, அதில் இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை காட்டி மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறுவதற்காக இந்தியாவின் நலனுக்காக இந்த பெர்து வேட்பாளர் நிறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பை சேர்ந்த இந்த பொது வேட்பாளர் மறைந்த சம்மந்தனின் ஒற்றையாட்சி கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு இனப்படுகொலையாளிகளை காப்பாற்றியவர். அவருக்கு பக்கபலமாக இருந்தவர்.
இந்த நிலையில் தமிழ் தேசியத்தையும். தேசிய தலைவர் எடுத்த அனைத்து முடிவுகளும் தவறு என சர்வதேச அரங்கில் சுட்டிக்காட்டி தமிழீழ போராட்டம் தேவையற்றது என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முன்னால் போராளிகள் சிலரை பாவித்து இந்த பொது வேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது. தேசிய தலைவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு என்று இளம் சந்ததியினருக்கும் உலகத்துக்கும் எடுத்துக்காட்டும் செயற்பாடாகும்.
கிழக்கு மண் விடுதலை போராட்டத்துக்கு கூடுதலாக அர்ப்பணிப்புக்களை செய்ததுடன் ஒரு குடும்பத்தில் 4 பேர் , 3 பேர், 2 பேர் ஒருவர் என பல சகோதரர்களை இழந்துள்ளோம் ஆயிரக்கணக்காண மாவீரர்களை இழந்த வலிசுமந்த மண் 50 ஆயிரம் மாவீரர்களையும் 3 இலச்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் தியாகம் செய்துள்ளோம் சொத்துக்களை இழந்து இன அழிப்புக்குள் நிற்கின்றோம்.
எனவே விடுதலை போராட்டதில் பாதிக்கப்பட்டுள்ள இந்த வலிசுமந்த படுவான்கரை மண்ணில் இருந்து நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம். பொதுவேட்பாளர் உடன் தேர்தலில் இருந்து ஒதுங்க வேண்டும். ஏன் என்றால் அவருக்கு இந்த மாவட்டத்தில் ஆயிரம் வாக்கு கூட விழுவது கேள்விகுறியாக உள்ளது.
சர்வதேசத்தில் இந்த போராட்டத்திலுள்ள உச்ச கட்ட வலிமையும் இழக்க செய்யப் போகின்றீர்கள். இது ஒரு வரலாற்று தவறு. இனத்துக்கு செய்கின்ற பச்சை துரோகம். உங்கள் பின்னால் நிற்கின்ற அனைவரும் கடந்த காலத்தில் ஒட்டுக்குழுக்கலாக இராணுவத்துடன் செயற்பட்டதுடன், தமிழ் தேசிய போராட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி துரோகத்தில் முழுகியவர்கள்.
1987 கொண்டுவரப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமான 13ஐ, புலிகள் எதிர்த்து நின்றபோது அதனை இவர்கள் அனைவரும் இந்திய காந்திய தேசத்துடன் நின்று எங்கள் இனத்தை அழித்தவர்கள். இன்று தமிழ் என்ற உணர்வை காட்டி தமிழர்களை மடையவர்களாக்கும் செயலை செய்ய போகின்றனர் எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
பிள்ளையான், கருணாவாக இருக்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவராக இருக்கலாம் அனைவரும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை பாதுகாக்க துடிக்கின்றனர். 13 வது திருத்தம் தமிழர்களின் தீர்வு என ஏற்றுக்கொண்டவர்கள் எனவே இந்த அரியேந்திரன் என்னத்துக்காக பொது வேட்பாளராக களமிறங்கி சோரம் போனாரா என தெரியவில்லை. எனவே அவர் இதில் இருந்து விலகவேண்டும் இது இனத்துக்கு செய்யும் கைங்கரியமாக இருக்கும் என்றார்.