தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கும், பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று காலை(17) மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளினால் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, திருகோணமாலை மாவட்ட தலைவி திருமதி செபஸ்டியான் தேவி, அம்பாறை மாவட்ட தலைவி திருமதி த.தேவராணி ஆகியோர் கலந்துகொண்டு தமது பொதுவேட்பாளருக்கான ஆதரவு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,
எங்களது சங்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக எங்களுடைய தமிழ் உறுப்பினரை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
கடந்த 15 வருடங்களாக யுத்தம் முடிவுற்ற பிறகு எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக எங்களுடைய உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்து நிலையிலும், எந்த ஒரு துளியேனும் எங்களுக்கான தீர்வு வராத பட்சத்தில் நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும், வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில் ஒரு தமிழராக தமிழினத்திற்காக ஒரு சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை நமக்காக, எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் அண்ணண் அவர்களை இந்த ஜனாதிபதி தேர்தலில், சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமித்துளோம்.
இது எங்களுக்கு தமிழர்களின் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ளும்முகமாக இந்த ஜனாதிபதி தேர்தலை 21,000 காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த இலங்கை அரசினால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. 21000 குடும்பங்களை சேர்ந்த அனைத்து மக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் ஒரு ஒடுக்கப்பட்ட இனமாக உரிமை மீறப்பட்ட ஒரு இனமாக அனைவரும் இந்த சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களுடைய தமிழ் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்பதனை இந்த ஊடக வாயிலாக பாதிக்கப்பட்ட நமது உறவுகள் தாய்மார்கள் இதுவரை நாங்கள் இழந்தது போதும் ஜனாதிபதியாக வெல்வாரா என்று எங்களுக்கு தெரியவில்லை.
ஆனால் இருந்தும் தமிழர்களாக நாங்கள் ஒருமித்த குரலோடு இந்த சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடி இட்டு எங்களுடைய வலியையும் வேதனையையும் எங்களுடைய இருப்பையும் சர்வதேசத்திற்கு தெரிவிப்பதன் ஊடாக எமக்கான ஒரு தீர்வினை பெறுவதற்கும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் ஒரு தமிழர்களாக பாதிக்கப்பட்ட ஒரு இனமாக வேதனை வலிகளில் இருக்கின்ற ஒரு இனமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
அனைவரும் அபிவிருத்தி என்பது வாழ்க்கை அல்ல எங்களுடைய இந்த 15 வருடம் எங்களுடைய யுத்தம் நடந்து எங்களுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு நாங்கள் எவ்வளவு வேதனைகளோடு இருக்கின்றோம் அபிவிருத்தி மாத்திரம் ஒரு தமிழினத்திற்கான விடுவினை கொடுக்காது.
ஆகவே எங்களுடைய உரிமை மீறப்படும் பட்சத்தில் எங்களுடைய உறவுகளின் நிலை அறியாத பட்சத்தில் நாங்கள் இன்று தமிழரை நோக்கி நிற்கின்றோம். நாங்கள் அரியநேந்திரன் அண்ணனுக்காக மாத்திரம் அல்லாது தமிழனின் இருப்பை தக்க வைக்கும் ஒரு சின்னமாக சங்கு சின்னத்திற்கு அனைத்து பொதுமக்களும் புள்ளடியிட்டு அமோக வெற்றியை ஈட்ட வைக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் 15 வருடமாக போராடி வருகின்றோம். வீதியில் இதுவரையில் எங்களுக்கான சரியான தீர்வை எந்த அரசாங்கமும் பெற்று தரவில்லை. ஜனாதிபதி கடந்த 13 ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்டத்தினை நடத்தி இருக்கின்றார் அதில் கூறி இருக்கின்றார். நான் வெகு விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு வருகின்ற மூன்று வருடத்திற்குள் அவர்களுக்கான தீர்வையும் கொடுத்து போர் குற்றத்தில் உள்ளவர்களை அடையாளப்படுத்துவேன் என கூறி இருக்கின்றார்.
ஏன் அவர் இந்த தருணத்தில் கூறுகின்றார் நாங்கள் இவ்வளவு காலமும் எட்டு ஜனாதிபதி வந்து சென்று விட்டார்கள் அவர்களுக்குத்தான், இந்த பேரினவாதிகளுக்கு தான் வாக்களித்து இருக்கின்றோம். எங்களுக்கான ஒரு நீதியும் இவ்வளவு காலமும் பெற்று தரவில்லை. நாங்கள் இந்த பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றதனால், அவருக்கு அந்த வாக்கு சென்று விடும் என்கின்ற நரி தந்திரத்தை பயன்படுத்தி நரியாக எங்களை அந்தப் பக்கம் திசை திருப்புகின்றார்.
ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் இன்று பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். எவ்வாறு என்றால் கோயில்கள் அபகரிப்பு, நிலங்கள் அபகரிப்பு, தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்குவது இதனை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த தருணத்தில் நாங்கள் அரியநேந்திரன் அவர்களை வரவேற்று அவரை இன்று பொதுவேட்பாளராக்கி உள்ளோம். எங்களுக்கான நீதியை அவர் பெற்றுத் தர வேண்டும் என்று.
பாதிக்கப்பட்ட சமூகமாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றம் அனுப்பி எங்களுக்கான நீதியை சர்வதேசம் ஊடாக இவர் எங்களுக்கு பெற்றுத் தருவார் என்று தான் இவரை நாங்கள் நம்பி இருக்கின்றோம்.
அதுமாத்திரமல்ல நாங்கள் இவ்வளவு காலமும் 250க்கு மேற்பட்ட தாய்மாரை இழந்து இருக்கின்றோம். இதற்கு பிறகும் தருகின்றோம் என இழுத்தடித்து எங்களுடைய காலத்தை வீணடித்து, இந்த போராட்டங்களை நழுவி நசுக்கி எங்களை முறியடிக்க விரும்பாதீர்கள்.
எங்களுக்கான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்றுத்தர எல்லோரும் முன்வர வேண்டும். நாங்கள் தேடுவது ஒரு உயிரைத்தான் தேடுகின்றோம். நிதியை கேட்கவில்லை. நீதி ஒன்றையே நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.
இன்று நாங்கள் எத்தனை துன்பங்களுக்குள் அகப்பட்டு இன்று வெளியில் வந்திருக்கின்றோம். 21,000 பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு குடும்பங்களுக்கு என்ன நிலை என்று தெரியுமா இன்று எத்தனை பிள்ளைகள் வீதியில் இருக்கின்றனர். இறந்திருக்கின்றார்கள் தாய்மார் இல்லாமல் இருக்கின்றார்கள், இதற்கு காரணம் இலங்கை அரசாங்கமே .
எங்களுக்கான நீதிக்காக ஒட்டுமொத்த தமிழரும் அரியநேந்திரன் அவர்களுக்கு வாக்களித்து சங்கு சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.