தேர்தலில் வாக்குப்பதிவு காலத்தின் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து வானிலை அறிக்கை பெறப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனர்த்தங்கள் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நிர்வகிப்பதற்கான விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.