மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 03 இலட்சமாக காணப்பட்டதுடன் தற்போது 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது என மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை, மின்சாரத்துக்கான கேள்விக்கும் மேலதிகமாக கடந்த 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மற்றும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதங்களில் மின்கட்டணத்தை அதிகரித்தது.
இலங்கை மின்சாரசபை இதுகுறித்த யோச னையை முன்வைத்தபோது, அது சாத்தியமற்றது எனத் தெரிவித்து அதனை நிராகரித்தோம். எனினும் எமது குரலுக்கு மின்சார சபை செவிசாய்க்கவில்லை. தற்போது தாங்கள் செய்தது தவறு என்று உணர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின்கட்டண அதிகரிப்பால் மின்பாவனையாளர் கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்திருந் தனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. மின்நுகர்வு 20 சதவீதத்தினால் குறைவடைந்தது.
அப்போது ஒரு யுனிட் மின்சாரத்தை கூட பயன்படுத்தாத 03 இலட்சம் குடும்பங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை மின்சார சபைக்கே தற்போது கணிசமான நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் மின்கட்டண அதிகரிப்பை நாம் எதிர்த்தோம்.
முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தத்தை அங்கீகரிப்பதில் மின் நுகர்வோர் மற்றும் பல்வேறு தொடர்புடைய தரப்பினரால் முன்வைக்கப்படும் நியாயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்தில் கொள்ளவேண்டும் என்றார்.