விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் திருப்பி கையளித்துள்ளார்.
அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கிய ஊழியர்களுக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நன்றி தெரிவித்ததுடன் நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு சகலவிதமான ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அவர் அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் அதிகாரிகளிடம் மேலும் உரையாற்றிய அமைச்சர்,
மக்கள் வாக்கெடுப்பை பயன்படுத்தி புதிய அரசை தேர்வு செய்துள்ளனர். தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 42% வீதம் பெற்றுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டின் அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என நம்புகின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் எடுக்கும் தீர்மானங்களை அவரது அரசாங்கத்தையோ விமர்சித்து ஊக்கப்படுத்த மாட்டோம். மாறாக எல்லாவற்றையும் எதிர்க்கும் அரசியலுக்குப் பதிலாக நேர்மறை புதிய அரசியல் கலாசாரம் இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என நம்புகின்றோம்.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் ஒன்றிணைத்து பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். இதுவரை, இது தொடர்பான அனைத்து விவாதங்களும் வெற்றி பெற்றுள்ளன.