கோழி இறைச்சிக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றி ஐம்பது ரூபா வரை குறையலாம் எனவும் அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை தற்போது ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 100 ரூபாவாக உள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்தார்.அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாளாந்தம் தேவையான அளவு கோழி இறைச்சி சந்தைக்கு வருவதாகவும், மேலும் முட்டையிடும் இறுதி கட்டத்தில் உள்ள கோழிகள் தற்போது இறைச்சியாக மாறி சந்தைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாட்களில் கோழி இறைச்சி விலை குறையும் என்றும், கிறிஸ்துமஸ் சீசனுக்கு ஓரளவுக்கு கோழி இறைச்சி தேவை அதிகரிக்கும் என்பதால், கோழி இறைச்சி விலை மீண்டும் ஓரளவு உயரலாம் என்றும் கூறப்பட்டது.
இதேவேளை அடுத்த மாதத்திற்குள் முட்டையின் விலை 25 ரூபாயாக குறையலாம் என்றும், தொழிலுக்கு தேவையான ஆதரவு கிடைத்தால், முட்டை விலையை மேலும் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் காலத்திலும், ஆண்டு இறுதியிலும் முட்டையின் தேவை ஓரளவுக்கு அதிகரிக்கும் என்றும், இதனால் முட்டை விலை மீண்டும் சிறிதளவு உயரலாம் என்றும் கூறப்பட்டது