யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக இருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் மூலம் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலிலேயே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தமை தெரியவந்துள்ளது.
அதேசமயம் இவ்விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், சென்ற நாடாளுமன்ற தேர்தலில்களின் போது 9 ஆக காணப்பட்ட இதன் எண்ணிக்கை பிறகு 7 ஆக மாறி தற்போது 6 ஆக இன்னும் குறைந்துள்ளது.
வடக்கில் உள்ளவர்கள் வெளிநாடு செல்வதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. அதன் எதிரொலியே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு.
அதுமட்டுமல்லாமல் இது வடக்கு மாத்திரமன்றி கிழக்கையும் பாதிக்கும். அதனால் வடகிழக்கில் குறைக்கப்படும் இந்த எண்ணிக்கை தென்னிலங்கையில் அதிகரிக்கப்படும்.
எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சனையாகவும் மாற வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிற்கு சென்ற தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது இந்த பிரச்சனையை சற்று கட்டுப்படுத்தும் எனவும் தெரிவித்தார்