மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்று 01 ஆம் திகதி அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் பலருடைய கவனத்திற்கு வந்துள்ளது.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவென்றால், “உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நோக்கிய தமிழர் தாயகம்” என்ற கருத்து பட அவர் இதனை கூறியிருக்கின்றார்.
தமிழரசு கட்சி ஆரம்ப காலம் முதல் அபிருத்தியை இரண்டாமிடத்திற்கு வைத்து, தமிழ் தேசியத்தை முன்னுரிமை படுத்தியே இதுவரை காலமும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமிழ் தேசியத்தை உறுதிப்படுத்துவதாக கூறியே சஜித்திற்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் திடீரென சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் அபிவிருத்தியையும் சேர்த்திருப்பது பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.
தமிழரசு கட்சி தமிழ் தேசியத்தை கைவிட்டுள்ளதா? அல்லது தமிழ் தேசியம் இப்பொழுது தேவையில்லாத விடயம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? ஏனைய கட்சிகள் கூறுவதை போலவும், இலங்கையிலே இருக்கின்ற பெரும்பான்மை தேசிய கட்சிகள் கூறுவதை போலவும் அபிவிருத்தியை நாங்கள் எட்டிவிட்டால் இனப்பிரச்சனை தானாக தீர்ந்துவிடும் என்கின்ற சித்தார்ந்தத்திற்கு துணைபோகின்றதாக அமைகின்றதா? அல்லது இப்போதைக்கு தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் அபிவிருத்தியையும் கொண்டுவந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசு கட்சி செய்யும் முயற்சியா என்ற கேள்விகள் எல்லாம் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றது.
தமிழர் தேசியத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை காலமும் செயற்பட்டு வந்த தமிழரசு கட்சி திடீரென உரிமையுடன் கூடிய ஒரு விடயத்தை முன்வைக்கின்ற பொழுது இது தமிழரசு கட்சி எடுத்த முடிவா என்று கேட்ட தொன்றுகிறது. அத்தோடு தமிழரசு கட்சி இது தொடர்பில் யாருடன் கலந்துரையாடியுள்ளது, மக்களிடம் இது தொடர்பான அபிப்பிராயம் பெறப்படதா என்பது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே சாணக்கியன் தன்னுடைய முகநூல் புத்தகத்தில் பதிவிட்ட தேசியத்தையும், அபிவிருத்தியையும் சமமாக பார்க்கின்ற அல்லது ஒன்றையொன்று குறைத்து மதிப்பிட்டு பார்க்கின்ற இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்ல போகின்றார்.