கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், அதனை மீளாய்வு செய்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பானது அரசாங்கத்தின் நிதி நிலைமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, வாழ்க்கைக்கான நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சரவைப் பேச்சாளர்,
2025 ஜனவரியில் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கான பணத்தை ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்ய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் நிதி நிலைமையை மீளாய்வு செய்து இவ்வாறு சம்பள அதிகரிப்புக்கு செல்ல முடியுமா? முடியாத பட்சத்தில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எந்த அளவில், எத்தனை கட்டங்களில் செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நாட்டின் நிதி நிலைமையை மீளாய்வு செய்த பின்னர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முறை குறித்து தீர்மானிக்கப்படும்-என்றார்.